கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தடைசெய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை கடந்த மே மாதம் 25ஆம் தேதியிலிருந்து சில கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியது.
இதையடுத்து, பல மாநிலங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதையடுத்து இந்த விமான சேவைகளில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவும், சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையில் கரோனா வைரசின் தாக்கம் ஓரளவு குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று வந்த 28 விமானங்களில் சுமாா் இரண்டாயிரத்து 300 பேர் சென்னைக்கு வந்தனர். இன்று சென்னைக்கு வரும் 28 விமானங்களில் சுமார் இரண்டாயிரத்து 450 பேர் முன்பதிவு செய்துள்ளனா்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு வரும் விமானங்களில் உள்ள பயணிகள் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கும் குறைவாகவே இருந்தது. அதேவேளையில், சென்னையிலிருந்து செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை மூன்றாயிரத்திற்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பினும், மற்ற மாவட்டங்களில் உள்ள சிலர் மீண்டும் சென்னைக்குத் திரும்புவதால் கரோனா தாக்கம் சென்னையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.