சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள 'அவ்வை சண்முகம் சாலையை' திமுக கட்சியைச் சார்ந்த முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட்ட பட்டாபிராமன் பெயரை சூட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
வெங்கட்ட பட்டாபிராமன் திமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்து வந்தார். 1932ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மேலும் சென்னை சட்டக்கல்லூரியில் தங்கப்பதக்கத்துடன் தனது சட்டப்படிப்பை இவர் முடித்தார்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பொதுவுடைமை கட்சியின் மீது ஆர்வம் உடைய வெங்கட்ட பட்டாபிராமன் 1955ஆம் ஆண்டு திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக கட்சியின் சட்டத்திட்டங்களை உருவாக்கியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. ஈ.வெ.கி. சம்பத் மற்றும் இரா. செழியன் உடன் இணைந்து திமுக சட்டத்திட்டங்களை இவர் உருவாக்கினார்.
இவருக்கு மோகன் ராமன், பி.எஸ். இராமன், பி. ஆர். இராமன் ஆகிய மூன்று புதல்வர்கள் இருந்தனர். இதில் மோகன் ராமன், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். பி. எஸ். இராமன், இந்திய மூத்த வழக்கறிஞர், கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபொழுது இவர் தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.
வெங்கட்ட பட்டாபிராமன் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அவர் வீடு இருந்த அவ்வை சண்முகம் சாலையை வெங்கட்ட பட்டாபிராமன் பெயராக மாற்ற சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
அவ்வை சண்முகம் சாலை, மெரினாவில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை பகுதியாக வி.பி.ராமன் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாயியாக இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளரான EPS - கடந்து வந்த பாதையும் கண்முன் நிற்கும் சவால்களும்!