சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ சிறப்பு விமானம், நேற்று இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது தமிழ்நாட்டில் உள்ள திருப்பூா் முகவரியுடன் கூடிய பாஸ்போர்ட்டில், சோலைமான்(29) என்ற பெயரில் ஒருவர் துபாய் செல்ல வந்திருந்தாா். அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரின் பயணத்தை, குடியுரிமை அலுவலர்கள் ரத்து செய்தனா். அதோடு அவரை துருவி துருவி விசாரித்தனா். அப்போது அவருடைய உண்மையான பெயர் மியாக் எனவும், அவர் வங்கதேசத்தை சோ்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும் கியூ பிரிவு காவல் துறையினரும், உளவுத்துறையினரும் நீண்ட நேரமாக விசாரணை நடத்திவந்தனர். அவர் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் எப்படி வந்தார்? தமிழ்நாட்டில் திருப்பூரில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தாா்? இவருக்கு போலி பாஸ்போா்ட் எடுத்து கொடுத்த ஏஜெண்ட் யாா்? என பல கேள்விகளை கேட்டனர். ஆனால் வங்கதேச இளைஞர் எந்த கேள்விக்கும் சரியான பதிலை கூறவில்லை.
இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் வங்கதேச வாலிபரை கைது செய்தனா். அதோடு மேல் நடவடிக்கைக்காக அவரை இன்று காலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாட்றம்பள்ளியில் போலி போலீஸ்காரர் கைது!