சென்னை கண்ணகிநகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலர், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? அப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியது.
இது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பதிலளித்த தமிழ்நாடு டிஜிபி, கடந்த 10 ஆண்டுகளில், கண்ணகிநகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த 170 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை ஏற்படுத்த செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் வழக்குறைஞர் பிரதாப், பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, உடனடியாக அமல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கோரி ஜான் பாண்டியன் போராட்டம்