சென்னை: தமிழில் தனது முதல் படமான 'ராக்கி' என்ற படத்திலேயே யார் இந்த இயக்குநர் என்று பிரமிப்புடன் பார்க்க வைத்தவர் அருண் மாதேஸ்வரன். அதனை தொடர்ந்து ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கினார். அதுவும் வித்தியாசமான படமாக அமைந்தது. இரண்டுமே பழிவாங்கும் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை மூலம் பாராட்ட வைத்தார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறியப்பட்டவர் அருண் மாதேஸ்வரன்.
இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் நடிகர் தனுஷ் கூட்டனியில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகையாக பிரியங்கா மோகன் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில்,தெலுங்கு பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ்,குமரவேல்,டேனியல் பாலாஜி,மூர்,நாசர்,விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால்,தென்காசி ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் படப்பிடிப்புக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார் .இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மேலும், இப்படத்திற்காக தனுஷ் நீண்ட தலைமுடி வளர்த்துள்ளார். இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில் மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து உறுதியான தகவல் படக்குழு தரப்பிலோ அல்லது தனுஷ் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டலாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் போர் நடக்கின்ற இடத்தில் சடலங்கள் கிடக்கும் இடத்தில் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் “கேப்டன் மில்லர்” திரைப்படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ரூ.28 ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும்... - நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை!