சென்னை: இந்தியாவில் இருந்து ஆவண குறும்படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) குறும்படம் 'சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது'-ஐ தட்டிச் சென்றது. தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படம், யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
திரைப்படம் முக்கியமான வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை சந்தித்தது ஈடிவி பாரத். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றது குறித்த அவரது மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய அவர், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்த படத்தின் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வ்ஸ், நீலகிரி மாவட்டத்தில் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு யானைகள் முகாம் குறித்து ஏற்கனவே தெரிந்திருந்தது எனவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் மனிதர்கள் விலங்குடன் எவ்வாறு வாழ வேண்டும் என்று குறித்து அழகாக விளக்கி உள்ளதாக அவர் கூறினார்.
யானைகள் பற்றியும் காடுகள் பற்றியும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று சிறந்த படத்தை எடுத்துள்ளதாக கூறிய அவர், இயக்குனரின் இந்த எண்ணத்திற்கும் ஆத்மார்த்தமான உழைப்பிற்கும் கிடைத்த வெற்றிதான் இந்த ஆஸ்கர் விருது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன், வனத்துறைக்கு இதில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'முதுமலை தெப்பக்குடு பகுதிகளில் யானைக் கூட்டங்களில் இருந்து தனிமைப்படுகின்ற யானை குட்டிகள் நிகழ்வு தொடர் நிகழ்வாக உள்ளது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து குட்டிகளை பராமரித்து உடனடியாக அதனுடைய தாய் யானையுடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்படி சேர்க்க முடியவில்லை என்றால் அது வளரும் வரை முகாமில் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. யானைகளைப் பொறுத்தவரை மனிதர்களுடன் உடனடியாக சேர்ந்து வாழும் சாமர்த்தியமும் கொண்டது. என கூறினார்.
விவசாய நிலங்களும் காடுகளும் அருகருகே இருப்பதால் யானைகள் விவசாய நிலத்திற்கு வந்து பயிர்களை சாப்பிடுகின்றன. இதனை தடுக்க விவசாயிகள், கோரிக்கையின் படி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் இருக்கும் உலகத்தில் தான் யானைகள், பறவைகள் என எல்லாமே ஒரே உலகத்தில் தான் நம்முடன் தான் இருக்கின்றன.
3 யானைகள் பலியான சம்பவம்: தர்மபுரியில் யானைகள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், காட்டுப் பன்றியினை தடுக்கவே மின் வேலி அமைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராமல் யானைகள் அங்கு வந்துவிட்டன. யானைகள் விவசாய நிலத்திற்க்கு வராமல் தடுக்க சோலார் ஃபேன்சிங் மற்றும் எலிபன்ட் ப்ரூப் டென்சஸ் என்ற சொல்லக்கூடிய தடுப்பு வேலிகளை அமைக்கலாம் என தெரிவித்தார். காடு மற்றும் நிலப்பரப்பு, மிகப்பெரியதாக இருப்பதால் தடுப்பு வேலி அமைக்க முன்னேற்பாடு தொடர்ந்து வனத்துறையால் செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
வனத்துறையில் E-Bike: காட்டு தீ குறித்து பதில் அளித்த அவர், காட்டில் தீ பிடிக்க மனிதர்கள் தான் காரணம் என தெரிய வந்திருப்பதாகவும் காட்டில் தீ வைக்க கூடாது என்றும் இதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் அறிவுரையை பழங்குடியின மக்களிடம் தெரிவித்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும், வனத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் E-Bike வாங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, முதுமலையில் உள்ள யானை பாகன்களை தாய்லாந்து சென்று அங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை வனத்துறை பயன்படுத்தி வருகிறது. மேலும், தற்போது ட்ரோன் உதவியுடன் யானை குட்டியை கண்டறிய பயன்படுத்தி வருகிறோம். அவ்வப்போது, காட்டுத்தீ குறித்தும் கண்டறிய ட்ரோனை பயன்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப்பகுதியை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னைக் காண வந்த அனைத்து தொண்டர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி பசுமையான தமிழ்நாடு வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து மக்களிடம் உருவாக்கி வருகிறார்' என தெரிவித்தார்.