சென்னை: ‘ராக்கி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறியப்பட்டவர், அருண் மாதேஸ்வரன். அந்தப் படம் வித்தியாசமான பழிவாங்கும் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 'சாணி காயிதம்' என்ற படத்தை இயக்கினார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படமும் வித்தியாசமான பழிவாங்கும் கதையாக இருந்தது. இதனையடுத்து, தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார், அருண் மாதேஸ்வரன்.
'கேப்டன் மில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, தனுஷ் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படம் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்காக தனுஷ் மிக நீண்ட தாடியுடன் காணப்படுகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட் எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு ஜூன் மாதமும் டீசர் ஜூலை மாதமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டே படம் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ளதைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ருத்ரன் பட பாடலுக்கு நடனமாடிய கலைஞர்களுக்கு சம்பள பாக்கி.. சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார்!