சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ''தோனி என்டர்டெயின்மென்ட்'' என்ற நிறுவனம் தொடங்கி திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷி தோனி நிர்வகித்து வருகிறார்.
தோனி தயாரிக்கும் தமிழ்ப்படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டு படத்தின் பூஜையும் நடைபெற்றது. இந்தப் படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், ''லவ் டுடே'' நாயகி இவானா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
’லெட்ஸ் கெட் மேரிட்’ (lets get married) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இவர் தோனி நடித்த ''அதர்வா தி ஆர்ஜின்'' என்ற காமிக்ஸ் நாவலை எழுதியவர் ஆவார். ''லெட்ஸ் கெட் மேரிட்'' படத்திற்கு இவரே இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியை நேரடியாகக் காண ’தோனி என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கும் ’லெட்ஸ் கெட் மேரிட்’ படக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' படக்குழுவினர் நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை இவானா, நடிகை நதியா ஆகியோர் போட்டியைக் காண வருகை தந்தனர். தோனியின் அதிரடி சிக்ஸர்கள் சென்னை அணி வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக இருந்தது. சென்னை அணி வெற்றி பெற்ற தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் அதிரடி பேட்டிங்கை மெய் மறந்து ரசித்துப் பாராட்டினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டனாக கடைசி முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் தோனி, இம்முறை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்கு கோப்பை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ETV Bal Bharat: குழந்தைகளை கவரும் பிரத்யேக நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகும் ஈடிவி பால் பாரத்!