சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை ஆணையர், தொழிலாளர் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி, நான்கு சட்டங்களாக நிறைவேற்றி இருக்கிறார்கள். நான்கு சட்டங்களால் ஏற்கனவே தொழிலாளர்களின் எண்ணற்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு சட்டங்களை நிறைவேற்றும் போது மாநில அரசை விலக்கி வைத்தார்கள். அப்படி செய்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
தொழிலாளர்கள் தொடர்பான விஷயங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமான மாநில பொது பட்டியல் இருக்கிறது. மத்திய அரசு இதில் ஏக குத்தகை போல சட்டத்தை நிறைவேற்றி, மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த சட்டத்தில், 300 பேர் உள்ள தொழிற்சாலைகளில் யாரிடமும் அனுமதி கேட்காமல், ஆலையை மூடலாம், ஆட்களை வெளியேற்றலாம் என சட்டத்தை திருத்தி உள்ளார்கள். பத்து பேர் இருந்தால் இன்டஸ்ட்ரியல் என்று இருந்ததை 20 பேர் இருந்தால் மட்டுமே இண்டஸ்ட்ரியல் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டங்கள் மூலமாக கிட்டத்தட்ட 90 சதவீத தொழிலாளர்களை தொழிலாளர்கள் சட்டத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனர். தொழிலாளர் சட்டங்கள் எதையும் பொருந்தாமல் செய்வதற்காகவே ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டு மாநில அரசாங்கம் சீர் செய்ய ஏற்ற வகையில் சட்டத்தை இயற்ற வேண்டும்.
விரைவாக இதில் அமைச்சர் முடிவெடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும். எழுபத்தி ஏழு மாதங்களாக பஞ்சப்படி நிலுவையில் இருக்கிறது. இதனைப் உடனடியாக வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது "என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னைக்கு பிரதமர் மோடி வருகை - 5 அடுக்குப்பாதுகாப்பு... ட்ரோன்கள் பறக்கத்தடை...!