சென்னை: அறநிலையத்துறை சார்பில் சில அதிரடி நடவடிக்கைகளை அந்த துறையின் அமைச்சர் சேகர் பாபு எடுத்துவருகிறார். அதன்படி, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பக்தர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பையும் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். இந்த திட்டம் பாராட்டத்தக்கது என்றாலும், மொட்டை அடிப்பவர்கள் இதனால், பாதிக்கப்படுவார்கள் எனவே, அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவேண்டும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திமுக உறுப்பினர்கள் கோவி செழியன், நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் சேகர்பாபு, மொட்டை அடிப்பதற்கு ரூ. 500 முதல் ரூ. 1,000வரை வசூலிக்கப்படுகிறது. திருக்கோயில்களில் இனி மொட்டை அடிக்க கட்டணம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப்பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 5,000ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்" என்றார்.
இந்தத்திட்டத்தினை நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இதையும் படிங்க: ‘திருத்தணியில் ராஜகோபுரம் விரைவில் கட்டி முடிக்கப்படும்’ - அமைச்சர் சேகர் பாபு