சென்னை: சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யும் இணையதள வசதியினை ரிப்பன் மாளிகையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சித் துணை ஆணையர்கள் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர். சென்னையின் 15 மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தடுப்பூசி மையங்கள் தொடர்பான விவரம் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான
- https//wwwchennaicorporation.govin/gcc/covid-details/
என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் மையங்களைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்யும்போதே தடுப்பூசி செலுத்தப்படும் தேதி, நேரம் அறிவிக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். மேலும்,
- 0444672 2200 என்ற தொலைபேசி எண்ணிலும்,
- 94999 33544 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும்
தொடர்புகொண்டு தடுப்பூசி மையங்கள், அதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையதளத்தைத் தொடங்கிவைத்த பிறகு அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கை காரணமாக சென்னையில் ஒரு நாளுக்கு 7000 ஆக இருந்த தொற்று தற்போது 400 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் பற்றி சுகாதார அலுவலர்கள் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் அறிவிப்பார்.
சிங்காரச் சென்னை 2.0 தற்போதுதான் ஆளுநர் உரையில் தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றி முழு விவரம் வருகின்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்" எனக் கூறினார்.
மேலும் நோய்த்தொற்றைக் குறைப்பதற்காக கே.என். நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.