சென்னை: திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதே நோக்கமாகும்.
இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி பள்ளி மாணவர்களை திமுகவினர் கட்டாயப்படுத்துவதாகக் கூறி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது. கையெழுத்து இயக்கம் தொடர்பாக தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது.
இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது. பள்ளிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே தொடங்கி உள்ளதால் ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக்கூடாது. இந்த இயக்கம் தொடர்பாக நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்பட்டு படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என கேள்வி எழுப்பினார். கையெழுத்து இயக்கத்திற்கு பிறகு நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் பொது நல வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்றாலும் இதுபோல பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறிய போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:தீபாவளி ஸ்பெஷல்... நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்புரயில் முன்பதிவு தொடங்கியது!