இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக பெயரளவில் அறிவித்து, அதனை மேற்பார்வையிட ஒரு கமிட்டியை பகட்டாக அதிமுக அரசு அமைத்ததே தவிர, உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவில்லை.
10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் நனைவதற்கு மட்டுமே அந்த நீர் பயன்படும். தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தது அதிமுக அரசு. தற்போது தாமதமாகத் தொடங்கிய தூர்வாரும் பணிகளையும் முறைப்படி செய்யாமல், கமிஷனுக்காகவே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீரும் செல்லவில்லை; நீர் சென்ற பகுதிகளிலும் வேளாண்மை செய்வதற்குத் தேவையான கடனோ, விவசாய இடுபொருள்களோ கிடைக்கவில்லை. விவசாயிகளின் வேதனைக்குரல்கள் இதுவரை முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும், தூர்வாரும் பணிகளைப் பார்வையிடக் காவிரி டெல்டாவிற்குச் செல்லும் நேரத்திலாவது இந்த வேதனைக்குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்ட முதலமைச்சர்!