சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஜெயலலிதாவின் கார் ஓட்டினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணைக்காக (மார்ச்.21) நேரில் ஆஜரானார். இதேபோல, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் விசாரணைக்காக ஆஜரானார். ஆணையத்தில் 2ஆவது நாளாக ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை (மார்ச் 22)ஆஜராகி, தனது விளக்கத்தை அளித்தார். அவரிடம், ஆணையம் தரப்பு விசாரணை, சசிகலா தரப்பு விசாரணை மற்றும் அப்பல்லோ தரப்பு விசாரணை என 3 தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.
இரண்டு நாட்களில் அவரிடம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் 9 மணி நேரங்களுக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சையின் மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்ன நோய்? என்ன சிகிச்சை? சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் யார்? என்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. அப்போலோவின் சிகிச்சையின் மீது நம்பிக்கையுடன் இருந்தேன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த விசாரணையில் சாட்சியங்களின் வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இதுவரை வெளிவராத பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
* டிசம்பர் 4 ஆம் தேதியே செயலிழந்த ஜெயலலிதாவின் இதயம்.
* 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மறைந்த நிலையில் அவரின் இதயம் டிசம்பர் 4 ஆம் தேதியே செயலிழந்தது தெரியவந்துள்ளது.
* டிசம்பர் 04, 2016 மாலை 3.30 மணி - அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தளத்தில் சத்தம் ஏற்பட்டுள்ளது.
* டிசம்பர் 04, 2016 மாலை 3.56 மணி - ஜெயலலிதாவுக்கு ECG எடுத்துப் பார்க்கும் போது அதில் எந்தவித குறியீடும் தென்படவில்லை.
* டிசம்பர் 04,2016 மாலை 4.20 மணி - ஜெயலலிதாவின் இதயம் செயலிழக்கிறது. தொடர்ந்து இயங்க வைக்க CPR முயற்சி செய்யப்படுகிறது.
* டிசம்பர் 04,2016 மாலை 5.30 க்குள் ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் கருவியான எக்மோ கருவி பொருத்தப்படுகிறது.
* டிசம்பர் 05,2016 இரவு 10 - 10.30 மணிக்குள்ளாக எக்மோ கருவி பயனளிக்காததால் அந்த கருவி எடுக்கப்படுகிறது.
* டிசம்பர் 05, 2016 இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது.
இதையும் படிங்க: சசிகலாவை ஆணையம் மீண்டும் அழைக்காது - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்