அமமுகவின் கூட்டணியில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹ்லான் பாகவி தி. நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”தயாநிதி மாறன் போல பல்லாயிரம் கோடி சொத்து என்ற அந்தஸ்துடன் நான் போட்டியிடவில்லை. திமுக வேட்பாளருக்கு இருக்கும் ஒரே தகுதி பல்லாயிரம் கோடி சொத்து இருப்பது மட்டுமே. 2 முறை எம்பியாக இருந்த அவர் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. உங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை கண்டுகொள்ளாத, உங்களுக்கு எதுவும் செய்யாத தயாநிதிமாறனுக்கு வாக்களித்து உங்களது எதிர்காலத்தை நாசமாக்கி கொள்ளாதீர்கள்.
நான் உங்களுக்காக, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்காக போராடுபவன். தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் சமுதாய பணியில் ஈடுபட்டவன். அதிமுக வேட்பாளராக சாம்பால் என்பவர் போட்டியிடுகிறார். மறைந்த ஜெயலலிதாவை மிக மிக கொச்சைப்படுத்திய கட்சி பாமக. அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்யக்கூடாது என்றார்கள். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று வழக்கு போட்டவர்கள்.
இந்த தேர்தலில் அதே ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வருகின்றனர். அந்த மோடியை 'டாடி' என்று அழைக்க தயாராக இருக்கின்றனர். இந்த இரட்டை வேட நிலைப்பாட்டை துரோகிகள் கையில் எடுத்துள்ளனர். எனவே திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் உங்களுக்கு எதுவும் நடக்காது. உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எனக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என தெரிவித்தார்.