சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நண்பகலில் வகுப்புகளைப் புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வில்லை என்றால், அவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு அரசாணை 207 ன் படி புதிய கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கக் கல்லூரி முதல்வர்களுக்குக் கல்லூரி கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பி இருந்தது.
இது குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் நோக்கம் தற்போது பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நீக்கம் செய்வதல்ல. இதுவரை இல்லாத வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ௪,000 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொள்ளலாம். அவர்களின் பணி அனுபவத்திற்கு நேர்முகத் தேர்வின் போது வழங்கப்படும் 30 மதிப்பெண்ணில் 15 மதிப்பெண் வரை வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. கௌரவ விரிவுரையாளர்கள் இத்தேர்வில் பங்கேற்றுப் பணி வாய்ப்பு பெற்றுப் பயனடைய வேண்டும்.
அரசு கல்லூரியில் ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது அவர்களும் அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது; வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு