சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தின் பின்புறத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், “தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவில் புதிதாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது.
2009 மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 11,170 ரூபாயும், 2009 ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 8000 ரூபாய் என்ற அடிப்படை ஊதியத்தையும் நிர்ணயித்துள்ளனர். இந்த முரண்பாட்டைக் கலைந்து ஒரே பதவியில் இருவேறு அடிப்படை ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏற்கெனவே நாங்கள் 2016ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, எங்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது. ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகால மாதாந்திர ஓய்வூதிய உயர்வில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கையை உடனடியாக அரசு வெளியிட வேண்டும்.
மாநிலத்தில் பணிபுரியும் மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும். இதுகுறித்து முடிவினை விரைவில் அறிவிக்காவிட்டால், தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடர் முழக்க போராட்டம்