சென்னை: கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதிபெற்றவர்கள் ஆவார்கள். www.trb.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கட்டங்களாக பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வுக்கு 4,01,886 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4,01,856 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களில் மாற்றுத்திறனாளிகள் 5,313 பேரும், பார்வைக் குறைவுடையோர் 1218 பேரும், 2662 பேர் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு 2,21,240 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத 1,80,616 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வின் போது நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து சிசிடிவி மூலம் இணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் வெளியிட்டு இருந்தது. தேர்வர்களுக்கு காலையில் நடைபெறும் தேர்வினை எழுத 7.30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வினை எழுத 12.30 மணிக்குள்ளும் தேர்வறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களுக்குள் மொபைல், வாட்ச், பெண்களின் நகைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும். மேலும் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வினை எழுதுவதற்கும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, 2022ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு,
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. தற்பொழுது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் 2ஆம் தாளுக்குரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்களின் கேள்விக்குரிய விடைகள் வெளியிடப்பட்டு அவர்களிடமிருந்து சந்தேகங்கள் பெறப்பட்டன. அவைகள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் முடிவுகள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்வு எழுதியவர்களில் மிகக் குறைந்த அளவே தகுதி பெற்ற நிலையில், பி.எட் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் எழுதிய தேர்வில் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்கள் அரசுப் பள்ளியில் பணிபுரிய, மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வினை எழுதி அதில் தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு இரண்டு முறை போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு பலன்களுக்காக ரூ.1,032 கோடி வழங்கல்!