சென்னை: தாம்பரத்தில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத் தலைவர் திருச்செல்வன், "இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுபவர்களுக்குப் பொதுப் பணியிட மாறுதல் கொள்கையை அரசும், டாஸ்மாக் நிறுவனமும் ஏற்படுத்த வேண்டும். மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க மது குடிப்பகம் (பார்) திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது.
ஆயத்தீர்வை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மது வருமானம் அரசுக்குச் செல்லும் நிலையில் டாஸ்மாக் நிறுவனம் இழப்பில் இயங்குகிறது என அரசு தெரிவிக்கக் கூடாது.
டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணி நியாயமான ஊதியம் வழங்கிட வேண்டும் எனப் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றபட்டன. இந்தக் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உக்ரைன் மாணவர்களுடன் ஸ்டாலின் உரையாடும் காணொலி!