டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் 26.03.2023 அன்று சென்னையில் ஏ.இ.பாலுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கே.திருச்செல்வன், கே.பி.ராமு,ஜி.சந்திரன் (சிஐடியு), டி.தனசேகரன், பி.எம்.மணிகண்டன் (ஏஐடியுசி), என்.ஜி.சிவா (ஏஐசிசிடியு), ஜி.சண்முகையா பாண்டியன் (டியுசிசி), எம்.பாக்கியராஜ் (டிடிபிடிஎஸ்), ஜி.வி.ராஜா ( டிஜிடிஇயு), கு.பால்பாண்டியன், வி.ஆறுமுகவேல் (டிஎன்ஜிடிஇயு), ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்.பெருமாள் (டிஎன்டிஎஸ்டபுள்யுஏ) உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் ஏப்ரல் 12ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியத்தில் பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும், ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கரூர் கம்பெனி குறித்தும், கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் குறித்தும், பணியிட பாதுகாப்பு குறித்தும், வாரிசு வேலை குறித்தும் விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிவரன்முறை, அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்திட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை வரையறை செய்து பணி நிரவல் செய்திட வேண்டும்- அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய சுழற்சி முறை பணியிடமாறுதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்கள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பணியின் போது மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும். கரூர் கம்பெனி என்ற பெயரில் துறை அமைச்சர் பெயரை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் சமூக விரோத கும்பலை கைது செய்திட வேண்டும். கேரளா மாநிலத்தை போன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மையப்படுத்தி பில்லிங் முறையை கொண்டு வந்து கடை நிர்வாகத்தை முறைப்படுத்திட வேண்டும். அனைத்து கடைகளிலும் உள்கட்டமைப்பு ஏற்படுத்திடவேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீண்டகாலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கும், நிர்வாக காரணங்களால் மூடப்பட்ட கடை ஊழியர்கள் மற்றும் கிடங்குகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடைப்பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அதோடு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு சாதகமாக வரும் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் சட்டவிரோத மதுக்கூடங்களை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு மதுக்கடைகளை நடத்தும் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக்கூடத்தொடரில் நிறைவேற்றி அறிவிப்பு செய்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 11.04.2023 அன்று சென்னை, சேலம், கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஐந்து டாஸ்மாக் மண்டல தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் சங்கத்திற்கு ஒருவர் வீதம் பொறுப்பாளர்களாக நியமனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி இடம் மற்றும் நேரத்தை தீர்மானித்துதுண்டறிக்கை, சுவரொட்டி அச்சிட்டு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்திட வேண்டும். இந்த போராட்டத்தில் அதிகளவில் ஊழியர்களை பங்கேற்க செய்திட வேண்டும். 11.04.2023 அன்று ஐந்து மண்டலங்களிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்த பிறகு, கோரிக்கைகள் நிறைவேற்றத்தில் திருப்திகரமான நிலை ஏற்படாவிட்டால் பொறுத்தமான நாளில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானைகளுக்கு 21ஆவது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்