சென்னை: பூவிருந்தவல்லியில் இருந்து போரூர் வரை ட்ரங்க் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் பணி காரணமாக ட்ரங் சாலை குறுகலாக காணப்படுகிறது.
குறிப்பாக, கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ட்ரங் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.
ஆனால் கடந்த ஐந்தாம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் பார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், பாரில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபானங்கள் இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுகலான சாலையில் தொடர்ந்து டாஸ்மாக் பார் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உடனடியாக பாரை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிக்கன் பிரைடு ரைஸில் கண்ணாடித் துகள் சர்ச்சை ... பேரம் பேசும் வீடியோ