இது குறித்து தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு செயலாளர் ஈஸ்வர குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 (டான்செட்) எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கு பிப்ரவரி 29, மார்ச் ஒன்றாம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு மையத்தினை 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-22358314, 22358412 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ, எம்.சிஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்பிற்கான டான்செட் நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி ஏழாம் தேதி முதல் பிப்ரவரி நான்காம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு பிப்ரவரி 29ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் தேர்வினை எழுதுவதற்கு 5 ஆயிரத்து 232 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எம்.பி.ஏ.படிப்பில் சேர்வதற்கு பிப்ரவரி 29 ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு 17 ஆயிரத்து 699 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மார்ச் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நடைபெறும் நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு 10 ஆயிரத்து 485 பேர் என 33ஆயிரத்து 416 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கான முடிவுகள் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்படும்.
மார்ச் 23ஆம் தேதி தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம்.
மேலும் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!