தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையிலுள்ள வடஹள்ளி கிராமம் அருகே வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது என்ற பலகையை ஜன.17ஆம் தேதி கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா என்ற அமைப்பினர் அகற்றி கலவரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கர்நாடகத்தில் அந்த அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜன.20ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைக்குள் புகுந்து தமிழ் எழுத்துக்களை அழித்தும், பெயர் பலகையை சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனை கார்நாடக அரசு கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய கார்நாடக பேருந்துகள், வாகனங்களை சிறைபிடித்து வைத்துக் கொள்வோம். மேலும், கன்னட மொழிகளிலுள்ள எழுத்துக்களை அழிப்போம்” என எச்சரித்தார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து, எவ்வித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள், விடுதிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், கோபாலபுரத்தில் உள்ள கர்நாடக வங்கி போன்ற இடங்களில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு- கர்நாடகா எல்லை விவகாரம்: அறிவிப்பு பலகையை மாற்றியமைத்த நெடுஞ்சாலை துறை!