சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா, அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.17) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் அகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய வானிலை நிலவரம்
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் நாளை (ஜூலை.18) பெய்யக்கூடும்.
வரும் நாள்கள்
கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
வங்கக் கடல் பகுதிகள்
வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று முதல் 21ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்றும் நாளையும் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் 21ஆம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் 21ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: சர்வதேச நீதி தினம்- குற்றவியல் நீதிமன்றம் வரலாறு!