மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டு ஆண்டு பணி காலம் முடிந்த பின்னர், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை 2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற செவிலியர்களுக்கும், கரோனா பணிக்காக தேர்வு செய்த செவிலியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி இருந்தனர்.
சென்னை எழிலகத்தில் ஆவின் பாலகம் அருகே தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதற்கு அனுமதி வழங்காமல் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து செவிலியர்கள் சேப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகில் போராடுவதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அந்தப் பகுதியில் குப்பைகளும், கழிவு நீரும் ஓடுகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள குடைகளை பிடித்தவாறு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபின், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 500 செவிலியர்களும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை 14 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் பணி முடிந்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை 2ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். அப்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்தனர். எனவே இதே நிலையில் பணிநிரந்தரம் செய்தால் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய 35 ஆண்டுகள் ஆகும். எனவே எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசின் நடவடிக்கை பொறுத்து இந்த போராட்டம் தொடர் போராட்டமாக மாறும் என தெரிவித்தார்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.