சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று (ஜூலை 22) ரூ. 2.34 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்து உள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 9,280 பேர் கரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒரே நேரத்தில் ஏழு பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். தமிழ்நாட்டில் மேலும் ஏழு இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுப்படுத்தப்படும்" என்றார்.
இதையடுத்து பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் பதிவாகாத மரணங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் 444 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. கரோனா நோயினால் மட்டுமல்லாமல் பல்வேறு இணை நோய்கள் காரணமாகவும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444, இன்றைய கரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும். இனி வாரம் தோறும் இறப்புக்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று உடனுக்குடன் விடுபட்ட மரணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனாவால் இறந்த சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தற்போது வருவாய் துறையின் ஆய்வில் உள்ளது. அது முழுமை அடைந்தவுடன் அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் புதிய பரிசோதனை முறை!