சென்னை : மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள கரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,”கிங் நோய் தடுப்பு மருந்து,ஆராய்ச்சி நிலையத்தில் பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 250 கோடியில் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.இங்கு அமைய உள்ள மருத்துவமனை தென்சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான். 1 கோடியே ஒரு லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. 97 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 3 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி வீணாகி உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் சுமார் 43 லட்சம் தடுப்பூசி வர வேண்டியது. அவற்றில் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி வந்து விட்டது. இன்னும் 36 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி வர வேண்டும். அதற்கு மத்திய அரசு தடுப்பூசி வரும் காலத்தினை அட்டவணையாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசிடம் இருந்து வந்த உடன் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் தடுப்பூசி போடும் முகாமினை நடத்துவோம்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் உடல்நிலையை அவர்களின் உறவினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம் மருத்துவர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை 1,485 மருத்துவர்களுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: நியாய விலைக்கடைகள் மீண்டும் செயல்படும் - தமிழ்நாடு அரசு