அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து பின்னர் கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக கிராம சபை கூட்டம் நடத்தப்படாது என அறிவித்தது.
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வேண்டுகோள் விடுத்ததே கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என திமுகவினர் கூறிவருகின்றனர்.
இந்தச்சூழ்நிலையில், தமிழ்நாட்டில், தடையை மீறி பெரும்பாலான இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி நடைபெற்ற கிராம சபை கூட்டங்கள் வருமாறு:-
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சியில், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சை: திருமலை, சமுத்திரம், கத்திரிநத்தம், ஒரத்தநாடு, பாப்பா நாடு, வல்லம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக்கும் இச்சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி: தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கந்துகால்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தடங்கம் சுப்பிரமணி பெற்றுக்கொண்டார்.

தென்காசி: தென்காசி குத்துக்கல்வலசை கிராமத்தில் கிராம சபை கூட்டம் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய வேளாண் திருத்தச் சட்டங்களின் பாதிப்புகள், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்களிடம் அவர் விவாதித்தார்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட எடையூர் ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகவும், காவிரி டெல்டா பகுதியில், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தக்கூடாது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ. பெரியசாமி கலந்துகொண்ட இக்கூட்டத்தில், புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன், ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்...!