சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பாரதியாரின் 141ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருஉருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ரத்தம் படிந்த கரையாலும், ராணுவ படைகளை கொண்டுமே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் உருவாக்கபட்டதாகவும், ஆனால் இந்தியா அப்படிபட்ட நாடு இல்லை என்றார். இந்திய விடுதலைக்காக மட்டுமே பாரதியார் போராடியதில்லை என்றும், இந்தியாவிற்கான அவரது கனவை இளைஞர்களை காண வைத்ததாகவும், பெண் முன்னேற்றம் குறித்தும் பாடல்கள் எழுதி புரட்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள் ரத்தம் படிந்த கரையாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டதாகவும், இந்தியா அப்படி கட்டமைக்கப்படவில்லை என்றார். மாறாக ரிஷிகளாலும், கவிஞர்களாலும் கட்டமைக்கப்பட்டதாகவும், அதனால் தான் மத்திய அரசு இந்நாளை இந்திய தேசிய மொழிகள் நாளாக நாடு முழுவதும் கொண்டாடுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
பிரஞ்சு, ஸ்பானிஷ் என எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள் என்றும், இந்திய மொழிகள் உலகின் மற்ற நாடுகளின் மொழிகளை விட உயர்ந்தது, முதன்மையானது என்பதை நினைவில் கொள்ளுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மேலும், நாட்டிற்காக போராடவும், உயிர் விடவும் வாய்ப்பும், நிலையும் நமக்கு இல்லை என்றும் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த வீரர்களின் கனவை நிறைவேற்றும் பெரிய பொறுப்பு உள்ளதாகவும், இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும் போது உலக நாடுகளில் இந்தியா முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மாணவர்கள் தோல்விகளால் துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சி செய்யுமாறும், நீங்கள் செய்யும் அனைத்து முயற்சியும் இந்திய நாட்டை உயர்த்தும் என்று நினைக்குமாறு கூறினார். மாணவர்கள், இளைஞர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாக அமையும் என்றும் நீங்கள் வளரவில்லை என்றால் நாடும் வளராது என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன், ஏன் இன்றும் கூட ஆங்கில மொழி இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், தாய்மொழி குறித்து நமக்கு பெருமிதம் இருப்பது அவசியமானது என்றும், ஏனென்றால் நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை விட மிகப் பழமையானது என்று ஆளுநர் தெரிவித்தார். மொழி என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவதாகவும், அதை பேச எந்தவித தயக்கமும் தேவையில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ் குஜராத் பயணம்.. பின்னணி என்ன?