சென்னை: தமிழ்நாட்டில் ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் வீடுகளில் தேவை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் விதிக்க அனுமதிக்கக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, இந்தத் தகவல் மக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்யும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மின்சார சட்டத்தில் குளறுபடிகளை களைவதற்காக மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், நிலைக் கட்டணம் மீது கூடுதல் கட்டணம் வசூல் என்று தகவல் வெளியாகியது.
இது தவறான தகவல். ஏற்கனவே, நிலைக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இது முற்றிலும் தவறானது.
வீடுகளுக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிலைக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்த பின்பு, நிலைக் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான செய்தி ஆகும். மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்களின் கருத்துரைகளை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துரைகளை பரிசீலினை செய்து, விதிகளின் மீது இறுதி முடிவு செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட ஐமேக்ஸ் திறப்பு!