சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மாநில அளவில் வெளியிடப்படும் தங்களின் விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்ட அளவில் மட்டும் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான முன் அனுமதியை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் பெற வேண்டும்.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலியில் மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களை வெளியிட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
அவற்றிடம் உத்தேசிக்கப்பட்டுள்ள விளம்பரத்தின் மாதிரி இரண்டு நகல்கலையும் இணைக்க வேண்டும். அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பர எண், நாள் ஆகியவை விளம்பரப்பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அடுத்த தேர்தலில் செந்தில் பாலாஜி எந்த கட்சிக்கு போவாரென்று அவருக்கே தெரியாது'