சென்னை:Omicron Spreads: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளி,கல்லூரிகள்:
தமிழ்நாட்டில் கரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்ததையடுத்துக் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. அப்போது கரோனா பாதிப்புகள் பெரியளவில் இல்லாமல் இருந்தது.
அதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை என அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்று குறைந்து வருவதால், நேரடி வகுப்பிற்கு மாணவர்கள் வருவதற்கு தொடங்கியுள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் இயல்பு நிலைக்குச் சற்று திரும்பிப் படித்து வருகின்றனர்.
ஒமைக்ரான் பரவல்:
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதியதாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் பரவி உள்ளது. தமிழ்நாட்டில் 34 பேருக்குக் கண்டறியப்பட்டு, 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், 22 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், 39 பேருக்கு 'எஸ் ஜீன்' குறைபாடு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேவையானப் படுக்கை வசதிகளும், மருத்துவக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கரோனா 2ஆவது அலையின் போது ஏற்படுத்தப்பட்ட மருத்துவ உட்கட்டமைப்புகள் உடனடியாக பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சருக்கு கடிதம்:
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டின் முதமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் கரோனா தொற்று பரவலைத் தடுத்து, தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து மீட்டு உள்ளீர்கள். தற்பொழுது ஒமைக்ரான் வகைக் கரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி, தற்பொழுது இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது.
இது மிகவும் விரைவாக இதற்கும் முந்தைய வைரஸ்களை விடத் துரிதமாகப் பரவக்கூடியது. குறிப்பாக ஏரோசால் மூலம் பரவுகிறது என்று நம்பப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் அதிகம் கூடும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும். பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க வகை செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்ட கரோனா பரவலின்போது பயன்படுத்தபட்ட மருத்துவமனைகள், கோவிட்கேர் மையங்களில் தேவையான ஆக்சிஜன், பாதுகாப்புக் கவசங்கள், மருந்துகளைக் குறுகிய காலத்தில் அதிக அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.