சென்னை: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “சைபர் கிரைம் புகார்கள் பலவிதமாக வருகின்ற சூழலில், தற்போது புதிதாக அதிகளவில் ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.
இந்த புகாரை பொறுத்தவரை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், பாஸ்போர்ட், சிம் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாகவும், இதனை காவல் துறையினர் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
அதனைத்தொடர்ந்து காவல் துறையிடம் பேசுமாறு அந்த தொலைபேசி இணைப்பை மாற்றுவார்கள். அதில் காவல் துறையினர் பேசுவதுபோல வாக்கி டாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பின்னர் உங்களது ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குகள் எல்லாம் சரியாக இருப்பதாக தெரிவித்தவுடன், பொதுமக்களும் உடனடியாக அவர்களுடைய ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை சரி பார்த்துவிட்டு ஒன்றாக இல்லை என கூறியபோதும், நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வர வேண்டும் என அழைப்பு விடுப்பார்கள்.
பதட்டத்தில் பொதுமக்களும் எங்களால் வர இயலாது என தெரிவித்தவுடன், அவர்களே உதவுவதுபோல வழக்கறிஞர் உங்களுக்கு உதவி செய்வார் என அவரிடம் தொலைபேசியை கனெக்ட் செய்வார்கள். இதனையடுத்து வழக்கறிஞர்கள்போல பேசும் நபர் தங்களுக்கு உதவ வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் காவல் துறையிடம் இருந்து தப்பித்து விடலாம் என தெரிவிப்பார்.
இதனை நம்பி ஒரு லட்சம் செலுத்திய பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. ஆகவே நீங்கள் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வார்கள். அதிலிருந்து வெளிவருவதற்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என ஆன்லைன் மூலமாக பணப்பறிப்பில் ஈடுபடும் கும்பல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இதுபோன்று 70 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 60,620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.10 செலுத்தினால் 3ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வாராண்டி - கட்சித் தலைவரின் பகீர் பேச்சு