உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரசின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. ஜெயக்குமார், எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடந்துமுடிந்த உள்ளட்சித் தேர்தலில் ஆளும் கட்சி பணம், அதிகார பலத்தை மீறி எங்கள் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. சில மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெறவில்லை. இல்லையென்றால் இன்னும் அதிக இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நெல்லை கண்ணன் எதையும் திட்டமிட்டு பேசவில்லை. அதற்காக அவரை கைதுசெய்வது தான் நீதியா? சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பற்றி பேசியதற்கும், ஹெச். ராஜா கவிஞர் வைரமுத்து பற்றி அவதூறாகப் பேசியதற்கும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு அரசு செல்லும் பாதை தவறானது' எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மண்ணில் பாஜக வெற்றிபெறுவதற்கோ, நீடித்து நிற்பதற்கோ வாய்ப்பே இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் பற்றி ஆலோசித்து கூட்டணி கட்சிகளுடன் பேசப்படும் என்றார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான நீச்சல் போட்டி!