தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
அதன்படி, யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்பொழுது உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், யுனைடெட் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரிகோரி ஜே ஹேயஸ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லாரன்ஸ் கல்ப், போயிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தவே கல்ஹவுன், லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தமரிலின் ஹீவ்சன், சாப்ரான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிலிப் பெட்டிட்கோலின், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வாரன் ஈஸ்ட், ஏர்பஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கைலம் பவுரி, லியானார்டோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அலெசாண்ட்ரோ புரபியுமோ மற்றும் ஹனிவெல் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேரிபஸ் ஆடம்சைக் ஆகிய 9 முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றை குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.
அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக் குழு” (Special Investment Promotion Task Force) தலைமைச் செயலாளர் தலைமையில் அமைத்துள்ளார்.
அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.