சென்னை: சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்; காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கவும்; சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: BF.7 கரோனா பரவல்: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!