சென்னை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று (மே 4) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவத்தின் தந்தை என குறிப்பிடப்படும் ஹிப்போகிரேட் பெயரிலேயே உலகளவில் பெரும்பாலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் (White coat ceremony)யின் போது உறுதிமொழி ஏற்பர். சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் மகரிஷி சரக் ஷப்த் என சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் என செய்திகள் பரவின. அப்போதே சுகாதாரத்துறை செயலாளரிடம் கூறி மருத்துவமனை முதல்வர்களுக்கு இந்த செய்தியால் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும் படி அறிவுறுத்தினேன்.
முதல்வர் மீண்டும் நியமனம்: மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது இந்த உறுதிமொழியை ஏற்பது என்பது விருப்பத்தின் பெயரிலேயே ஏற்கலாம் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த உறுதிமொழியை எந்த மொழியிலும் எடுக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
அதனோடு ஹிப்போகிரேட் உறுதிமொழியில் அனைவரையும் காப்பாற்ற வேண்டும், நோயாளிகளை சிறப்பாக கவனிப்பது, தேவையின்போது மற்ற மருத்துவர்களிடம் உதவி கேட்பது போன்ற பல நல்ல கருத்துகள் உள்ளன.
ஆனால் மகரிஷி சரக் ஷப்த்தில் பசு, பிராமணர்களுக்கு முன்னுரிமை; மன்னனின் எதிரி, மக்களால் வெறுக்கப்படுபவர்கள், கெட்டவர்கள், இறக்கும் தருவாயில் இருப்பவர்கள், ஆண்துணை இல்லாமல் வரும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூடாது போன்ற கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
மேலும் இந்த விவகாரத்தில் மருத்துவமனை முதல்வர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர். மேலும் மருத்துவமனை முதல்வர் பேரிடர் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றினார் எனக் கூறினர். மேலும் அவர் என்னை சந்தித்து தனக்குத் தெரியாமல் நடந்ததாக கூறினார். அதனைத்தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மதுரை மருத்துவமனை கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி ஏற்ற விவகாரம்: காத்திருப்பு பட்டியலில் டீன்!