சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "திமுக மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி எதிர்ப்பு. 1966 முதல் 2022 வரை திமுக செய்த சாதனை தமிழக அரசுப் பள்ளியில் கூட தமிழைக் கட்டாயமாக்க முடியவில்லை என்பதுதான். புதிய கல்விக் கொள்கை மூலமே தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திமுகவினர் நடத்தும் பள்ளியில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை. அங்கெல்லாம் 3வது மொழியாக இந்தி இருக்கிறது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டியை ஆட்டும் செயல் முதலமைச்சரின் செயல்.
மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழி விருப்ப பாடம்தான். ஆட்சிக்கு வந்து 9 ஆண்டில் பாஜக எங்கும் இந்தியை திணிக்கவில்லை. பிரதமரே குஜராத்திதான். பிறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காகத்தான் அவர் இந்தியை கற்றுக் கொண்டார். இந்தியை பயன்படுத்தும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. எனவே இந்தியை கட்டாயமாக தமிழகத்தில் கொண்டுவர மாட்டோம்.
இந்தி திணிப்பு எனும் பெயரிலான திமுகவின் போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு நாடகத்திற்கு எதிர்மறையாக திமுக நடந்து கொண்டுள்ளது. ஐஐஎம், ஐஐடியில் இந்தி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிக்கை அளித்தது உண்மை என்றால், முதலமைச்சர் அதை காட்ட வேண்டும். பிரதமர் அலுவலகம் உட்பட எங்கு வேண்டுமானாலும் திமுக போராடட்டும், ஆனால் போராட்டத்தில் உண்மை இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது 2, 3 காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம் என விமர்சித்தார் பெரியார்.
பாஜக விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவின் இந்தி கபட நாடகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அதில் திமுக நடத்தும் பள்ளிகள் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வருவோம். உதயநிதி தமிழகத்தில் இந்தி படத்தை விற்க, இந்தி நடிகைகளை தமிழகம் கொண்டு வருவதற்காக, புதிதாக தற்போது இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என கூறி வருகிறார். லால்சிங் சட்டா எனும் இந்திப் படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது. இது இந்தி திணிப்பு இல்லையா? தமிழ்ப் படங்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா? உதயநிதிதான் அந்த படத்தை தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திரைகளில் வெளியிட்டார்.
பிரதமரே தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார். மின் கட்டண பில் இன்று வருகிறது. மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த ஆர்ப்பாட்டம். இந்த பருவமழைக்கு அனைவரும் படகு வாங்கிக் வைத்துக் கொள்ளவும். முதலமைச்சர் பதறுவதை பார்த்தால் சென்னை தத்தளிக்க போகிறது என தோன்றுகிறது. மத்திய அரசின் பணத்தை வைத்துக் கொண்டு, 14 மாதங்களாக திமுகவினர் என்ன செய்தார்கள்?
பரந்தூர் மக்களை கலந்து பேசாமல் விமான நிலையம் அமைக்கும் முடிவை திமுக அறிவித்ததால்தான் பிரச்சனை. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதுதான் பாஜக நிலைப்பாடு. திமுக பரந்தூர் விமான நிலைய நிலப் பிரச்சனையை சரியாக கையாளவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்: பல்வேறு திட்டங்கள், மசோதக்கள் குறித்து விவாதிக்கப்பட்டன