சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் அமலுக்கு வருகிறது. அதில் மதுக் கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் இன்று பாஜக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை திறக்கக் கூடாது, நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தின் முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழ்நாட்டில் கரோனா தொற்று இன்னும் கட்டுபடுத்தப்படாத சூழலில், தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை திறக்க உள்ளதை கண்டித்து பாஜக ஆர்பாட்டம் நடத்தி வருகிறது.
டீ கடைகளை வைத்து வாழ்வாதரத்தை நகர்த்தி வரும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், டீ கடைகளை திறக்காமல், மதுபானக்கடைகளை திறக்க அவசியம் என்ன. இதே போன்று கடந்த ஆண்டு தொற்று எண்ணிக்கை 500 ஆக இருந்த போது மதுபான கடைகளை திறப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய இதே திமுகவினர், இன்று இப்படி நடப்பது அவர்களின் இரட்டை நிலையை காட்டுகிறது. ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி மதுக்கடைகளை மூட வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறதாகவும், செங்கல்பட்டு மையத்தில் ஆய்வு நடந்து வருகிறது எனவும், ஒன்றிய அரசு நல்ல முடிவை எடுக்கும் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின்தான் இரும்பு மற்றும் சிமெண்டின் விலையும் உயர்ந்துள்ளது, இதனை குறைப்பது அவர்கள் கையில் தான் உள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா வழிமுறைகள் அடங்கிய 'கையேடு': அமைச்சர் கே.என். நேரு வெளியீடு!