சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆம் நாளான இன்று (ஜன.11), பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் கேள்வி நேரத்தின்போது, பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் பகுதியில் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அரசு ஆவண செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "அரசு கலை கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 20 மாதங்களில் 31 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன" என்றார். அப்போது இடையே பேசிய சபாநாயகர் அப்பாவு, "31 கல்லூரிகள் தொடங்கி இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால், எனது தொகுதியில் ஒரு கல்லூரிகூட தொடங்கவில்லை. நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன்" என்றார்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "நீங்களும் நீண்ட நாட்களாக கேட்டு வருகிறீர்கள். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து, உங்கள் தொகுதியிலும் கல்லூரி தொடங்க முதலமைச்சரிடம் அறிவுறுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆளுநரின் ஆட்சேபனை ஏற்கப்பட்டதா? - தமிழ்நாடு அரசு விளக்கம்