சென்னை: மயிலாப்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "இயக்குநர் பாக்யராஜ் நடிப்பில் 3.6.9, அகத்தியன் குறும்படங்கள், மற்றும் சில விளம்பரப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளேன்.
சில மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது தோழி மூலம் அறிமுகமான சினேகா என்பவருடன் ராமாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சில காலம் வசித்து வந்ததாகவும். அப்போது சினேகாவின் நண்பர்கள் பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய மூன்று பேர் தனக்கு அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ், ரியா, நந்தினி ஆகியோர் சினேகா வசித்துவரும் அறைக்கு அடிக்கடி வந்து செல்வதும் மது அருந்துவதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் பின்னர் தெரிய வந்ததாகவும், இதனால் அங்கிருந்து வெளியேறலாம் என முடிவு செய்த நிலையில், சினேகா தனக்கு யாரும் இல்லை என தன்னிடம் நம்பும் வகையில் பேசி அங்கேயே தங்க வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒரு நாள் போதைப்பொருள் உட்கொண்டு அதிக மயக்கத்தில் இருந்த சினேகா நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததால் அவரிடம் விசாரித்த பொழுது தன்னால் போதைப் பொருள் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை எனவும் தான் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தானும் ரியா, நந்தினி, பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் பாலியல் தொழில் செய்து தான் பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் என அஞ்சி வெளியேற முடிவு செய்தேன். இதைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். எனவே அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென தனது நண்பர் ஒருவர் மூலம் வெளியேற அறையில் இருந்த பொருட்களை காலி செய்த பொழுது சினேகா என்னை தடுத்தார்.
மேலும் தங்கள் ரகசியம் அனைத்தையும் தெரிந்து கொண்டதால் தங்களை வெளியில் சென்று காட்டிக்கொடுத்து விடுவேன் என்கிற அச்சத்தில் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 30 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அந்த அறையை விட்டு வெளியேறினேன்.
மேலும், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனக்கு போன் செய்து பாலியல் தொழிலுக்கு என்னையும் அழைப்பதோடு அவ்வாறு வர மறுத்தால் என் மீதும் எனக்கு உதவிய நண்பர்கள் மீது பண மோசடி புகார் மற்றும் பாலியல் தொழில் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர்.
திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் என்னிடம் திரைத்துறையில் இனிமேல் பணியாற்ற முடியாதவாறு செய்து விடுவோம் எனவும் மிரட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாலையில் துணை நடிகை அரை நிர்வாணப் போராட்டம்!