சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி மீண்டும் இயக்குனர் பணியிடம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே இருந்த 'இயக்குனர்' பணியிடத்திற்கு 'ஆணையர்' என்ற பணியிடத்தை கடந்த அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, அப்போதைய முதல் ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் (Sigy Thomas Vaidhyan IAS) நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மேலும், சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆணையராக பணியிட மாற்றத்தின் மூலம் பணியாற்றினர்.
இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்த உடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பணியிடத்தினை மாற்றி ஆணையர் பணியிடமாக நியமனம் செய்தனர். அதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடம் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி (G Arivoli IAS) நியமனம் செய்யப்பட்டார். தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆசிரியர்கள் முதலமைச்சருக்கும், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமாெழிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறும்பாேது, 'கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2017 பள்ளிகளுக்கான துறையின் உயர் பதவியான 'பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்' பணியிடம் இருக்கும்போது, 'பள்ளிக்கல்வி ஆணையர்' என்று ஒரு புதிய பதவி உருவாக்கி அதில் இந்திய ஆட்சி பணியை சேர்ந்த அதிகாரியை நியமனம் செய்தனர் என்றார்.
அவ்வாறு நியமனம் செய்யும்போது, ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றம் சார்பாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், இது குறித்து அப்போதைய திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடமும் முறையீடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்நிலையில் 2021-ல் திமுக பொறுப்பேற்றபோது, பள்ளிகளில் துறை ஆணையர் பணியிடம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அந்த இடத்தில் அமர வைக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் வந்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் பதவி - 2 ஆண்டு காணாமல் போன காரணம் என்ன?
அவ்வாறு நியமனச் செய்யப்பட்ட முதல் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குனர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டுகள் ஆசிரியர்கள் மாணவர்களிடையே களத்தில் பணியாற்றி வந்த ஒருவரையே பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக நியமம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தோம் என்றார்.
இதன் விளைவாகவே, ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கோரிக்கையை ஏற்று ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த அறிவொளியை நியமனம் செய்துள்ளதாகவும், இது ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் கற்றல், கற்பித்தல் சிறப்பாக நடைபெறுவது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் பிரச்னையை எளிதில் அறிந்து உடனடியாக தீர்த்து காணக்கூடிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இருப்பதால், ஆசிரியர் ஒரு மகிழ்ச்சியான சூழலில் கற்றல் கற்பித்தலை நிகழ்த்திட ஏதுவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியில் ரத்து செய்து பள்ளிகளில் துறை இயக்குனர் பணியிடத்தை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்த கோரிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் நன்றி என்றார். இனி தமிழகம் கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மையாக திகழும் என்பதில் ஐயமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்ததிருந்த நிலையில், பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த அனைத்து பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன?