சென்னை: ஊரக உள்ளாட்சி துறையில் 'நம்ம ஊரு சூப்பரு’'என்ற இயக்கம் தொடர்பாக பேனர் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கத்தின் மூலம் அங்கன்வாடிகள், பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பேனர் வைக்கின்றனர். உரிய முறையிலே வைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற சிறப்பு மக்கள் இயக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தின்போது தொடங்கப்பட்டது.
இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திட முதலமைச்சர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.
'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம், ஒன்றிய அரசின் 'தூய்மையே சேவை' இயக்கத்தோடு இணைந்து செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது. நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் சேர்ந்திருந்த 47,399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
21 ஆயிரத்து 775 பள்ளிகள், 22 ஆயிரத்து 695 அங்கன்வாடி மையங்கள், 45ஆயிரத்து 824 அரசு கட்டிடங்கள், 70ஆயிரத்து 11 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 47ஆயிரத்து 949 நீர் நிலைகள், ஆயிரத்து 569 கீ.மீ., அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பயன்படுத்தப்பட்ட பேனர்கள் 611 ரூபாய்க்கு மட்டும் தான் வாங்கப்பட்டது” என தெரிவித்தார்.
மேலும், ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுவதால் அது உண்மையாகும் என்ற கற்பனையில் எடப்பாடி பழனிசாமி இந்த குற்றச்சாட்டை கூறிவவதாகவும், ஆதாரமில்லாமல் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் தலைமையிலான ஆட்சியின்போது 500 ரூபாய் உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி விளக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக கூறினார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் ஒன்றிய அரசிடம் இருந்து உரிய நிதியை பெறமுடியாமலும், ஜனநாயக படுகொலை செய்த அரசு தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வரும் நிலையில் தான், ஆதாரமில்லாமல் அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்த எதிர்கட்சி தலைவர் முயற்சி செய்வதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமத்திலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 2.75 லட்சம் பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்காத நிலை கடந்த அதிமுக ஆட்சியில் நிலவப்பட்டது. இதன் காரணமாக 2019- 20ஆம் ஆண்டுகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். Commission, Collection , Corruption என கடந்த அதிமுக ஆட்சியை பற்றி எங்கள் தலைவர் கூறிய வார்த்தைகளைக் கூட மாற்ற தெரியாதவர்கள் அவர்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: ஆடியோ விவகாரத்தில் சுமூக முடிவு; சூர்யா சிவா இடைநீக்கம்: பின்னணி என்ன?