சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய ராணுவத்தின் MI-17VS ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, குன்னூர் போலீசார் சந்தேக மரணம் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்து உள்ள நிலையில், வழக்கின் விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முறையான ஹெலிகாப்டர் டேட்டா ரெக்கார்டர், காக் பிட் வாய்ஸ் ரெக்கார்டர் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் குன்னூர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கை நிலுவையில் வைத்தனர். மேலும் சூலூர் ராணுவ விமான தள அதிகாரிகள் இது குறித்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் இருப்பதாக கூறி முழுமையான தகவலை பகிர முடியாது என்ன தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பிபின் ராவத் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி, முதல் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கையில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும், இயந்திர கோளாறோ, நாச வேலையோ, அலட்சியமோ காரணமில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவல்துறை தரப்பிலும் அடர்ந்த மேகங்கள் பகுதியில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னணியில் எந்த சதியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த கூற்றுகளை எல்லாம் உறுதி செய்வதற்கு, ஹெலிகாப்டர் டேட்டா மற்றும் காக் பிட் வாய்ஸ் ரெக்கார்ட் போன்ற ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்காததால், இந்த விசாரணையை நிலுவையில் வைத்திருந்ததாக தெரிவித்த தமிழக காவல்துறை, முன்னாள் முப்படை தலைமை தளபதி பிபின் ராபத் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையை கைவிடுவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம்