சென்னை: தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4வது ஆசிய பாரா விளையாட்டி போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. நேற்றுடன் (அக். 28) ஆசிய பாரா விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், அதில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.
மேலும், பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஈரான் 131 பதக்கங்களுடனும் (44 தங்கம்), மூன்றாம் இடத்தில் ஜப்பான் 150 பதக்கங்களுடனும் (42 தங்கம்), கொரியா 103 பதக்கங்களுடன் (30 தங்கம்) 4வது இடத்திலும் உள்ளன.
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா 72 பதக்கங்களை வென்று இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்க அறுவடை செய்தனர். ஸ்கேட்டிங், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
இதில், அவிக்ஷித் விஜய் விஸ்வநாத் (தனிப்பிரிவில்) தங்கப் பதக்கமும், கார்த்திகா (ஸ்கேட்டிங் குழு போட்டியில்) வெள்ளியும், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெள்ளியும் வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் போட்டி முடிந்து சென்னை விமான நிலையம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பதக்கம் வென்றவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவிக்ஷித் விஜய் விஸ்வநாத், "ஆசிய அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டுக்காக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வெற்றிக்கு சரியான முயற்சியும், பயிற்சியுமே அவசியம். இதை முறையாக செய்தால் வெற்றியை அடைய முடியும்.
இந்த வெற்றியில் என்னுடன் உறுதுணையாக இருந்த என்னுடைய பயிற்சியாளர், பெற்றோர், என்னோடு விளையாடிய சக விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்களால் தான் என்னால் பதக்கம் வெல்ல முடிந்தது. விளையாட்டுத் துறையில் நிறைய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
அதேபோல், ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், நாங்கள் இன்னும் பல வெற்றிகளைத் தேடி தருவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைவர் தரிசனம்.. விமான நிலையத்தில் நடிகர் ரஜினி.. மும்பையில் #Thalaivar170 சூட்டிங் நிறைவு!