தமிழக சட்டப்பேரவையில் பால் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கான விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும்" என்றார். மேலும் நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆவின் பால் விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்பதை முதலமைச்சர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முகவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும் என்கிற முதலமைச்சரின் தவறான கூற்றைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
மேலும், 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்கிய போதும், பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியபோதும் அது பொதுமக்களுக்கு கடுமையான சிரமத்தை அளித்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதிக செலவினங்களை ஏற்படுத்தும் வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை செய்யும் நடைமுறையைத் தவிர்த்து ஆவின் பால் விற்பனையை தமிழ்நாட்டில் ஆதரிக்க ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலே ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டும் என்றார்.