சென்னையின் மழை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்.
மேலும், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கன மழை முதல் மிதமான மழையும்
நாளை (ஜூலை.10) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை.11) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) 14 சென்டிமீட்டர் மழையும், சுலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 13 சென்டிமீட்டர் மழையும், ஆரணி (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 11 சென்டிமீட்டர் மழையும், தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 10 சென்டிமீட்டர் மழையும் பெய்ததுள்ளது.
மீனவர்கள் செல்ல வேண்டாம்
இன்று (ஜூலை.9) முதல் ஜூலை 12 ஆம் வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், நாளை (ஜூலை.10) முதல் ஜூலை 12ஆம் தேதிவரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
மக்கள் தவிர்க்க வேண்டும்
ஜூன் முதல் ஜூலை வரை தமிழ்நாட்டில் 130.2 மில்லி மீட்டர் மழை பெய்யும், தற்போது வரை 127.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோயம்புத்தூர் நீலகிரி போன்ற இடங்களில் அதிக மழை பெய்வதால் மண்சரிவு ஏற்படும் எனவே மலை எறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பதவிக்காக அல்ல கொள்கைக்காக திமுகவில் இணைந்தேன் - மகேந்திரன்