இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "தஞ்சை பெரிய கோவிலை கருவறை கோயிலாகவும் கருங்கல் கோயிலாகவும் கட்டியவர் சித்தர் கருவூரார். அவர்தான் ராஜராஜ சோழனுக்கு ஆணையிட்டவர்.
பூஜைகள், குடமுழுக்குகள் அனைத்தும் தமிழ் முறைப்படிதான் செய்ய வேண்டும் எனக் கருவூரார் அன்றே மன்னனுக்கு உத்தரவிட்டார். அது நடக்காததால் கருவூரார் சாபம் விட்டுவிட்டார். அதாவது, அரசாளுபவர்கள் யாரும் கோயிலுக்குள் சென்றால் அவர்களுக்கு ஆபத்துகள் வரும் எனச் சாபமிட்டார். எனவே முறையாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் பேராபத்துகள் நிகழும்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது யாகத்தீயில் விபத்து ஏற்பட்டு 48 பேர் மரணமடைந்தனர். அதன்பின் இரண்டே நாள்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசரகோலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது மறக்க முடியாத வரலாறு.
அதன்பின் முறைப்படி குடமுழுக்கு நிகழ்த்தப்படாத நிலையில், இப்பொழுது 22 ஆண்டுகளுக்குப் பின் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படுவது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்படும். எனவே இதை மக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
மேலும், பரிகார பரிந்துரையாக இக்குடமுழுக்கின் யாகங்கள் அனைத்தும் சித்தர் நெறியின்படி செந்தமிழ் நெறியின் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கென்றே மந்திரங்கள் பல சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. சாதி, மொழி, இன, வேத பாகுபாடுகள் தமிழ் மொழியில் இல்லை என்பதால், சித்தர் கருவூரார் சாபம் நீங்க முறையான குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கையாக வைத்து எச்சரிக்கிறோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: நடுகல் கூறும் வரலாறு: திருச்சியில் நூல் வெளியீட்டு விழா!