கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு உதவும் வண்ணம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட்டார் ராஜேந்திர ரத்னு. இவர் தமிழ்நாட்டில் அதிக பாதிப்புள்ள இடங்களில், அரசின் மருத்துவ நடவடிக்கைளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் கொடுக்கவேண்டும்.
இதன் ஒரு பகுதியாக நேற்று அம்மா மாளிகையில் உள்ள கரோனா வைரஸ் தடுப்பு குறித்து தொலைபேசி ஆலோசனை மையத்தை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ராஜேந்திர ரத்னு மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் சென்னை அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர்,
அப்போது பேசிய ஆணையர் பிரகாஷ், "சென்னையில் மேற்கொள்ளப்படும் கரோனா பணிகளை மத்திய குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த இறப்பு சதவீதம் உள்ளது.
சென்னையிலும் இறப்புவிகிதம் 0.7 ஆக உள்ளது. மாநகராட்சி எடுத்துவரும் கரோனா தடுப்பு நடவடிக்கை பற்றியும் கரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் மருந்துகளை பற்றியும் ஆய்வு செய்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.
மேலும், கரோனா பரிசோதனைக்காக ஆலோசிக்க தனி கைபேசி எண்ணை உருவாக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, கரோனா சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். டெல்லி, மகாராஷ்டிரா மும்பை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் நபர்களுக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது" என தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ராஜேந்திர ரத்னு, "தமிழ்நாட்டில் மூன்று நாள்களுக்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாடு கரோனா கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் என்ன விதமாக வழிமுறைகளை பின்பற்றுகிறது என்று தெரிந்து கொண்டு மற்ற மாநிலகளுக்கு அந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்படும்" என்றார்.