சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிகளை உருவாக்குவதற்கான விதிமுறைகளை 2023 ஆகஸ்ட் 16-ந் தேதி, தேசிய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், "தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும், புதிதாக துவக்கப்பட உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மருத்துவப் பிரிவுகள், மருத்துவ ஆய்வகம், படுக்கை வசதிகள், தினமும் நோயாளிகளின் வருகை, அறுவை சிகிச்சை குறித்த விபரங்களும் இடம் பெற வேண்டும்.
மேலும் இந்த விதிமுறைகளின் நோக்கமாக, ஆண்டுதோறும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ நிறுவனத்தில் (சுயநிதிப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் கல்லூரி) குறைந்தபட்ச தங்குமிட வசதிகள், கற்பித்தல் தொடர்புடைய மருத்துவமனைகள், கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவக் கல்லூரி துறைகளில் உள்ள உபகரணங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இந்த விதிமுறைகள் 2024-25 கல்வியாண்டு முதல் நிறுவப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.
புதிய இளங்கலை மருத்துவக் கல்விக் கல்லூரிகளை நிறுவுவதற்கான விண்ணப்பங்கள் 50, 100, l50 இடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 2024-2025 கல்வியாண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட, MBBS மாணவர்களின் சேர்க்கையைத் தொடர்ந்து நடைபெறும். 2024-25 ஆம் ஆண்டிலிருந்து 150 எம்பிபிஎஸ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் கல்லூரிகள் சேர்க்கைக்கான அனைத்து விதிமுறைகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கு முன்னர் 200 அல்லது 250 இடங்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்தும், அதைப் பெறத் தவறிய கல்லூரிகள், தங்கள் முந்தைய விண்ணப்பத்தில் ஒரு முறை மட்டும் 2024-25 ம் கல்வியாண்டில் துவங்குவதற்குக் கேட்கலாம்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 MBBS இடங்கள் என்ற விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் இளநிலை மருத்துவப் படிப்பில், உடற்கூறியல், உடலியல் , உயிர் வேதியியல் , நோயியல், மைக்ரோ பயோலாஜி, பார்மாகோலோஜி, தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல், கம்யூனிட்டி மருத்துவம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மனநலம், தோல்நோய், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், ரேடியோ-நோயறிதல், கண் மருத்துவம், குடலியல், மயக்கவியல், பல் மருத்துவம், ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளைத் துவக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய அளவில் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையைவிட, தமிழ்நாட்டில் மருத்துவர்கள் நோயாளி விகிதம் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் மற்றும் ஆயிரத்து 500 வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் வெளிவருகின்றனர்.
அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள, 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஒன்றும், 21 சுயநிதிக் கல்லூரிகள், சுயாட்சிக் கல்லூரிகள் (Deemed Universities) 13 சேர்ந்து, மொத்தம் 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 71 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ இடங்கள் 11 ஆயிரத்து 475 ஆக இருக்கிறது. இதில் பல்மருத்துவ இடங்கள் 2 ஆயிரத்து 150 ஆக உள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், "தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி துவங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கும்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் புதிய மருத்துவக்கல்லூரியில் 100 அல்லது 150 இடங்களுக்கு மேல் எம்பிபிஎஸ் படிப்பில் வழங்கப்படாது என்ற புதிய விதிமுறைகளைத் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என கூறியுள்ளது. இது சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதுடன், சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது.
கார்ப்பரேட் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், கட்டணத்தை உயர்த்தவும் மருத்துவ இடங்களில் பற்றாக்குறையை அதிகரிக்கவும் இதனை அறிவித்துள்ளனர். மருத்துவர்களிடம் வேலையின்மை அதிகரிக்கிறது என்பதற்காக மருத்துவக் கல்லூரிகளை மூடுவதோ, மருத்துவ இடங்களை குறைப்பதோ தீர்வாக இருக்காது. அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும். மருத்துவக்கல்லூரியின் இடங்களைக் குறைப்பதும், கல்லூரியின் எண்ணிக்கையைக் குறைப்பதும் தவறானது.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரியை திறப்பது, தமிழ்நாடு அரசின் கொள்கையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படுவது சரியானது கிடையாது. எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு என்பது மருத்துவப்படிப்பில் 12ஆம் வகுப்பு போன்றது தான். எனவே எம்பிபிஎஸ் முடித்து, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப்படிப்புகளை படிக்கலாம். ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். இந்த முடிவு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சாதகமானது. எம்.பி.எஸ் இடங்களை குறைப்பதன் மூலம், அறிவியல் மருத்துவத்திற்கு பதிலாக வேறு மருத்துவ முறைகளை வளர்க்கப் பார்க்கின்றனர்.
இந்தியாவில் 2030ல் "ஒரே தேசம் ஒரே மருத்துவமுறை" என்பதை கொண்டு வர நினைக்கின்றனர். எல்லா மருத்துவத்துறையையும் கலந்து மிக்ஸோபதி மருத்துவத்துறையைக் கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எவ்வளவு மருத்துவக்கல்லூரி தேவை என்பதையும், மருத்துவ இடங்கள் வேண்டும் என்பதையும் மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவ கட்டமைப்பு, பணியிடங்களில் பற்றாக்குறை இருந்தால் அனுமதி கொடுக்க மாட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டோம் என்பது அராஜகப் போக்கு, சர்வாதிகாரம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அதனை ஏற்க முடியாது" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக விலகல் விவகாரத்தில் மவுனம் கலைக்குமா பாஜக? - காத்திருக்கும் அரசியல் கட்சிகள்!